சனி, 11 ஏப்ரல், 2026

#1242 – ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் நீங்கள் உங்கள் மகன் திருமணத்தை நல்ல பெரிய முகூர்த்த நாளில் தானே வைத்திருக்கிறீர்கள்? இனி எப்படி வேதாகமத்தைப் போதிப்பது? தவறு தானே

#1242 – *ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் நீங்கள் உங்கள் மகன் திருமணத்தை நல்ல பெரிய முகூர்த்த நாளில் தானே வைத்திருக்கிறீர்கள்? இனி எப்படி வேதாகமத்தைப் போதிப்பது? தவறு தானே*.
 
*பதில்* : எனது நண்பரும் ஊழியருமானவர் தன்னிடம் இதைக் குறித்து கேட்டதாக என்னிடம் நேரடியாய் பேசினார். 
 
நாள் நட்சத்திரம் குல கோத்திரம் ஜாதி பிரிவு என்ற எவ்வித பாகுபாடும் இந்துக்களினுடையது. கிறிஸ்துவுக்குள் வாழும் எவரும் இவற்றை பார்த்து தனது வாழ்க்கையை அமைக்க நினைப்பவர்கள் – கிறிஸ்துவிற்குள் வரவேண்டும். 
 
உள்ளுர் மாத்திரம் அல்லாமல் பிற மாநிலங்கள், மாவட்டங்கள், தேசங்கள் என்று அனைவரும் பிள்ளைகள் முதற்கொண்டு கலந்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் பரீட்சை காலங்கள் முடிந்த பின்னர் கடைசி வாரம் ஏப்ரல் மாதத்தில் எனது மகனுடைய திருமண தேதி அமையவேண்டும் என்று கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தீர்மானம் செய்யப்பட்டது. 
 
கடைசி வாரத்தில் ஒரு நானை தேர்வு செய்யலாம் என்று தீர்மானித்த பொழுத வாரத்தில் நடுநாளான புதன் கிழமை வைக்கலாமா என்று பெண் வீட்டார் கேட்டபொழுது இரண்டு காரணங்களை முன்னிட்டு நான் வேண்டாம் என்றேன்.
 
ஒன்று – ஊழியர்கள் பெரும்பாலும், அவரவர்கள் சபையில் வாரத்தின் மத்திய நாளில் ஏதாவதொரு நிகழ்ச்சி வைத்திருப்பார்கள். ஆகவே, பலர் வருவது தடைபடலாம்.
 
இரண்டாவது – வழக்கமாக பொன்னு வந்தாலும் புதன் வராது என்ற ஒரு பழமொழியை நினைத்து – புதன் கிழமையில் வேண்டாம் என்றேன். 
 
செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வேதாகம வகுப்பு பலர் வைத்திருப்பதால் வியாழக்கிழமையை தேர்ந்தெடுத்தோம்.
 
பேதுருவை பார்த்து பவுல் நேரடியாய் கேட்ட உதாரணம் (கலா. 2:11) ஊழியர்களுக்கு ஒரு பாடம். அதை கடைபிடிப்பது தமிழ்நாட்டில் ஒரு சதவீதம் கூட இருப்பார்களா என்பது எனக்கு சந்தேகம் தான். 
 
இந்த தேதியைக் குறித்து என்னிடம் நேரடியாய் கேட்காமல், பலரிடம் இதைக் குறித்து புறங்கூறியவர்களுக்கு நாங்கள் குறித்த திருமணத் தேதி ஒரு முகூர்த்த நாள் என்று எப்படி அறிந்தார்கள்? அவர்களுக்கு அதனைக்குறித்த ஒரு தேடுதல் இருந்திருக்கிறதே என்பதை நினைத்து நான் சிரித்துக்கொண்டேன்.
 
ஒரு ஊழியரைக் குறித்த எந்த தவறான செயலையும் நேரடியாய் அவரிடமே தொடர்புக் கொண்டு விசாரித்து கண்டிக்கத் தெரியாத கோழைகள், வேத வசனத்தை தனது சபையாருக்கு  கண்டிப்பாய் போதிப்பது எப்படி?
 
சம்பந்தப்பட்டவர் அந்த இடத்தில் இல்லாத பொழுது அவரைக் குறித்து மற்றவர்களிடம் (புரளியாய்) பேசும் கலாச்சாரம் பெருகி உள்ளது. வேதம் அதற்கு எதிர்மறை தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. 
 
நீதி. 10:18  பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.
 
சங். 15:1-3 கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.
 
இன்று நான் இந்தியா வந்தவுடன் இருவர் என்னை தொடர்புக்கொண்டு இதைக் குறித்து அவர்களிடம் சில ஊழியர்கள் பேசினதை எனக்கு தெரியப்படுத்தியாதால், இந்த பதிவை கேள்வி பதிலின் பதிவாகவே அனைவருக்கும் தெளிவுப்பத்தியும் தெரியப்படுத்தவேண்டியதும் எனது கடமை என்பதால் இதை இங்கு பதிவிடுகிறேன்.
 
எந்த நபரைக் குறித்த தகவல்களையும் சந்தேகம் அல்லது குற்றம் என்று தோன்றினால் - நேரடியாய் நாம் பேசவேண்டும். அது கிறிஸ்தவனுக்கு அவசியம். புறங்கூறுவது அல்ல! 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
 ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
தொடர்பு : +91 81 44 77 6229

Q&A Biblical Whatsappல் இணைய (locked group) : https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

வலைதளம் : www.kaniyakulamcoc.blogspot.com


Print Friendly and PDF

திங்கள், 30 மார்ச், 2026

#1241 – இருதயத்தில் விசுவாசித்து வாயினால் அறிக்கையிட்டால் இரட்சிக்கப்படுவாய் என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 10:9-10ல் சொல்லியிருக்க, இரட்சிக்கப்படுவதற்கு ஞானஸ்நானம் முக்கியம் என்று நீங்கள் வலியுறுத்துவதை நான் ஏற்கமுடியாது. வசனத்தை நன்கு கவனிக்கவும்.

#1241 – *இருதயத்தில் விசுவாசித்து வாயினால் அறிக்கையிட்டால் இரட்சிக்கப்படுவாய் என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 10:9-10ல் சொல்லியிருக்க, இரட்சிக்கப்படுவதற்கு ஞானஸ்நானம் முக்கியம் என்று நீங்கள் வலியுறுத்துவதை நான் ஏற்கமுடியாது. வசனத்தை நன்கு கவனிக்கவும்*. 
 
*பதில்* : ஞானஸ்நானத்தைக் குறித்த எனது கட்டுரையை நீங்கள் கவனமாகப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். முதல் பத்தியிலிருந்தே, இரட்சிப்பை நோக்கிய படிகளை நான் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியிருந்தேன். சூழலிலிருந்து பிரித்து எடுக்கப்படும் ஒரே ஒரு வார்த்தைகூட, அந்த விவாதத்தின் முழுப் பொருளையும் மாற்றிவிடக்கூடும்.
 
இரட்சிப்புக்கு முன்,
வசனத்தைக் கற்று, விசுவாசித்து, விசுவாசத்தை அறிக்கையிட்டு, தண்ணீர் ஞானஸ்நானத்தில் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தால் - இரட்சிப்பு வரும் என்பது வேதாகமத்தின் இரட்சிப்பின் படிகளை நான் பட்டியலிட்டிருந்தேன்.
 
தேவனுடைய வார்த்தையைக் கேட்ட பிறகு,
விசுவாசித்து,
மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றால்,
பின்பு இரட்சிப்பு (மாற்கு 16:16) என்பதை இந்த வசனத்தில் காணமுடியும்.
 
இன்னும் ஞானஸ்நானம் பெறாத ஒருவர், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அல்லேலூயா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்றெல்லாம் சொல்லிவிட்டதால், அவர் இரட்சிக்கப்பட்டார் என்று சொல்வது வேதாகமத்திற்கு முரணானது. அது ஒரு தவறான, அங்கீகரிக்கப்படாத முறையாகும்.
 
அப்போஸ்தலர் 2:38-ல் ஞானஸ்நானம் பெற்றவர்களை, தேவன் 47-ஆம் வசனத்தில் இரட்சிக்கப்பட்டவர்கள் என்று அழைக்கிறார்.
 
வேதவாக்கியங்களை ஏற்றுக்கொண்ட பிறகு, யாரும் (தண்ணீர்) ஞானஸ்நானத்தைத் தள்ளிப்போடவில்லை.
அந்த வசனம் இருதயத்தில் உணரப்பட்டது, நள்ளிரவில் கூட உடனடியாக ஞானஸ்நானம் நடைபெற்றது. அப்போஸ்தலர் 16:14-15, 33, 9:18, 19:4-5
 
வாழ்க்கையின் இறுதிவரை வேதாகமச் சட்டத்தைப் பற்றிக்கொண்டு அதன்படியே வாழ்ந்து முடிக்கிறவர்களுக்கு, பெறப்பட்ட இரட்சிப்பு முழுமையடைகிறது (மத்தேயு 24:13).
 
ஒருவர் ஆராதனைக் கூட்டத்தில் கலந்துகொண்டவுடனேயே இரட்சிப்பு கிடைத்துவிடுகிறது என்றால், கிறிஸ்துவின் சொந்தக் கைகளால் அப்பத்தைப் பெற்றுக்கொண்ட யூதாஸ் ஸ்காரியோத்தின் நிலையைச் சிந்தித்துப் பாருங்கள். யோவான் 13: 26-27
 
கேள்வியில் நீங்கள் மேற்காட்டிய ரோமர் 10:9-10 ம் வசனங்களின் காரியத்தின் விஷயத்திற்குப் கீழே பதிலளிக்கிறேன்.
 
ரோமர் 10:9-10ல் வரும் வாக்கியங்களான “விசுவாசத்தை அறிக்கையிடுவதில் இரட்சிப்பு” என்பது மட்டுமல்ல, பின்வரும் நேரடி வசனங்களில் இன்னும் கூடுதலான காரியங்களிலும் இரட்சிப்பு கோடிடப்பட்டதை கவனிக்கவும்: 
1- விசுவாசித்தால் இரட்சிப்பு, அப்போஸ்தலர் 16:31
2- கிருபை இரட்சிக்கிறது, அப்போஸ்தலர் 15:11
3- இயேசு கிறிஸ்துவினால் இரட்சிப்பு, அப்போஸ்தலர் 4:12
4- செய்தி இரட்சிக்கிறது, அப்போஸ்தலர் 11:14
5- உயிர்த்தெழுதல் இரட்சிக்கிறது, ரோமர் 5:10
6- நம்பிக்கை இரட்சிக்கிறது, ரோமர் 8:24
7- அறிக்கை இரட்சிக்கிறது, ரோமர் 10:10
8- நற்செய்தி இரட்சிக்கிறது, 1 கொரிந்தியர் 15:2
9- அறிவு இரட்சிக்கிறது, 1 தீமோத்தேயு 4:1
10- மறுஜென்ம முழுக்க இரட்சிக்கிறது, தீத்து 3:5
11- பரிசுத்த ஆவியின் புதுப்பித்தல் இரட்சிக்கிறது, தீத்து 3:5
12- தண்ணீர் இரட்சிக்கிறது, (ஒப்பனையான ஞானஸ்நானம்), 1 பேதுரு 3:20-21
13- இரட்சிப்பு கீழ்ப்படிதலினாலும் உண்டாகிறது, எபிரேயர் 5:9
14- தேவபக்தியுள்ள துக்கமும் மனந்திரும்புதலும் இரட்சிப்புக்கு வழிநடத்துகின்றன, 2 கொரிந்தியர் 7:10
 
கிளி ஜோசியக்காரர் தன் பட்சியிடம் ஒரு நல்ல சீட்டை எடுத்து தா என் செல்லக்குட்டியே என கேட்டு தனக்கு விருப்பமான ஒன்றை எடுத்துக்கொள்வது போல, இரட்சிப்பைக் குறித்து சொல்லப்பட்ட இப்படியான வசனங்களிலிருந்து நமக்கு விருப்பமான பகுதிகளை மட்டும் நாம் தேர்ந்தெடுக்க முடியாது. 
 
சிலர் கிருபையை மட்டும் வலியுறுத்துகிறார்கள், மற்றவர்கள் இயேசுவை மட்டும், இன்னும் சிலர் ஜெபத்தில் மட்டும், சிலர் விசுவாசிக்கிறோம் என்று அதையே சொல்லி கவனம் செலுத்துகிறார்கள். 
 
ஆனால் வேதாகமம் தனித்தனிப் பகுதிகளை அல்ல, ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கிறது.
 
நமக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுப்பதற்காக தேவன் நமக்கு ஒரு பட்டியலைக் கொடுத்தாரா? அல்லது இரட்சிப்பு எனும் கருத்தை பல்வேறு வழிகளில் விளக்க வேண்டியிருந்ததால் அவர் நமக்கு ஒரு பட்டியலைக் கொடுத்தாரா?
 
தேவனுடைய திட்டத்தை நாம் பகுதியளவு மட்டும் தீர்மானித்துவிட்டு, அதைப் பற்றி அவர் சொன்ன மற்ற அனைத்தையும் புறக்கணிக்க முடியாது.
 
அது அனைத்தும் எவ்வாறு ஒன்றிணைகிறது என்பதை நாம் கண்டறிய வேண்டும், ஏனென்றால் அது அனைத்தும் உண்மையே.
 
ரோமர் புத்தகத்தில் முந்தைய அதிகாரத்தில் பவுல் இங்ஙனம் எழுதுகிறார்:
 
"கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே." (ரோமர் 6:3-7). 
 
ஞானஸ்நானத்தின் மூலமாகவே நாம் கிறிஸ்துவுடன் ஒன்றாக உயிர்ப்பிக்கப்பட்டோம் என்பதில் மிகத் தெளிவான வார்த்தையை கவனிக்கலாம்.
 
அப்படியானால், 
ஒருவர் “விசுவாசத்தினால் மாத்திரம்” இரட்சிக்கப்படுகிறாரா? - இல்லை.
ஒருவர் விசுவாசத்தினால் இரட்சிக்கப்படுகிறாரா? ஆம் — விசுவாசத்தினால் “மாத்திரம்” அல்ல என்பதை கவனிக்கவும்.
 
அவ்வாறே, இரட்சிப்பானது கிருபை (எபேசியர் 2:8), நற்செய்தி (1 கொரிந்தியர் 15:1-2), ஞானஸ்நானம் (1 பேதுரு 3:21), சகிப்புத்தன்மை (மத்தேயு 10:22), மற்றும் கிறிஸ்துவின் இரத்தம் (ரோமர் 5:9) ஆகியவற்றின் வழியாய் பூரணப்படுதலை நோக்கி விவரிக்கப்படுகிறது. இவை முரண்பாடானவை அல்ல. அவை ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
 
அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று  தேவன் விரும்புகிறார் (2 பேதுரு 3:9), மேலும் அதற்குத் தேவையானதை அவர் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு அதில் மாத்திரம் பதிலை இரட்சிப்பிற்காய் தேடினால், நான் மாற்று பாதையில் செல்ல நேரிடும் (சங்கீதம் 119:160).
 
இரட்சிப்பு என்பது பாவத்திலிருந்து மீட்கப்படுவதைப் (இரட்சிக்கப்படுவதைப்) பற்றியது (மத்தேயு 1:21). 
தெய்வீக உதவியின்றி மனிதகுலத்தால் பாவத்திலிருந்து தப்பிக்க முடியாது.
 
இரட்சிப்பானது:
நம்மிடத்தில் அதை விரும்பும் பிதாவாகிய தேவனிடத்திலிருந்தும் (தீத்து 3:4-5)
அதை நிறைவேற்றிய இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்தும் (எபிரேயர் 5:8-9)
அதை வெளிப்படுத்தும் பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்தும் (யோவான் 16:7-15)
வருகிறது.
அது கிருபை, அன்பு, மற்றும் இரக்கத்தால் தூண்டப்பட்டு (எபேசியர் 2:8-9; யோவான் 3:16; தீத்து 3:5), கிறிஸ்துவின் மரணம், பாடு, இரத்தம், ஜீவன், மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் மூலம் சாத்தியமாக்கப்படுகிறது.
 
இரட்சிப்பானது கீழுள்ள சாராம்சத்தில் மனிதகுலத்திற்கு அறிவுறுத்தப்படுகிறது.
சிலுவையில் கிறிஸ்துவின் மரணம் (கலாத்தியர் 6:14).
கிறிஸ்துவின் பாடு (எபிரேயர் 2:9-10, 17-18).
சிலுவையில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தம் (ரோமர் 5:9; எபேசியர் 1:7).
கிறிஸ்துவின் வாழ்க்கை (ரோமர் 5:10; 1 கொரிந்தியர் 15:16-17; கொலோசெயர் 2:13).
கிறிஸ்துவின் அதிகாரம் (அவருடைய நாமம்) (யோவான் 20:30-31; அப்போஸ்தலர் 4:12).
கிறிஸ்துவின் செய்தி (நற்செய்தி) (ரோமர் 1:16; 1 கொரிந்தியர் 1:18).
செய்தியின் துல்லியம் (சத்தியம்) (யோவான் 8:31-32; 2 தெசலோனிக்கேயர் 2:10).
 
மேலும், அவற்றில் பின்வருவன அடங்கியிருக்கிறது:
வசனத்தைக் கேட்டல் (ரோமர் 10:14-17)
விசுவாசித்தல் (யோவான் 8:24)
மனந்திரும்புதல் (அப் 3:19)
அறிக்கை செய்தல் (ரோமர் 10:9–10)
ஞானஸ்நானம் பெறுதல் (அப் 2:38; 1 பேதுரு 3:21)
நம்பிக்கையுடன் வாழ்தல் (ரோமர் 8:24)
கீழ்ப்படிதல் (எபிரேயர் 5:9)
தேவனுடைய கிரியைகளைச் செய்தல் (யாக்கோபு 2:20–26)
 
மனிதகுலத்தில், நமது இரட்சிப்பிற்காக வேறு எவரும் அதை செயல்படுத்த இயலாது. நாமே நமது இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படவேண்டும். (பிலிப்பியர் 2:12).
 
சிலர் ஞானஸ்நானம் “வெறும் அடையாளப்பூர்வமானது” என்கிறார்கள். அது ஆவிக்குரிய சத்தியங்களை அடையாளப்படுத்தினாலும், அது நமது சுய விருப்பத்திற்குரியது ஆகிவிடாது. 
கர்த்தருடைய பந்தியும் அடையாளப்பூர்வமானதுதான், ஆகவே அதை தவிர்த்து விடமுடியுமா? அது இன்றியமையாதது ஆயிற்றே!
 
தேவன் ஞானஸ்நானத்தைக் கட்டளையிடுகிறார் (அப் 2:38), அதை பாவங்களைக் கழுவுதலுடன் தொடர்புபடுத்துகிறார் (அப் 22:16). அது நம்மை இரட்சிக்கும் என்றும் கூறுகிறார் (1 பேதுரு 3:21). நாம் உண்மையாகவே இரட்சிப்பைத் தேடுகிறோமென்றால், தேவன் தெளிவாகக் கட்டளையிட்டதை ஏன் நிராகரிக்க வேண்டும்?
 
“இப்பொழுதே இரட்சிப்பின் நாள்” (2 கொரிந்தியர் 6:2). 
 
ஏற்றுக்கொள்வதோ நிராகரிப்பதோ அவரவரது தீர்மானம். காதுள்ளவன் கேட்கக்கடவன் !!
 
நிரந்தரமான நரக அக்கினியில் விழுந்து தான் எரிந்து வேதனைப்படாமலிருக்க, தனது பாவங்கள் மன்னிக்கப்பட்டு பரலோகத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் என்று தனது சொந்த இரட்சிப்பைத் தேடிக்கொண்டிருக்கும் ஒருவர் இப்படியான இரட்சிப்பின் முறையை பின்பற்ற தனது சொந்த முயற்சியில் இறங்குவாரோ? நான் நிச்சயமாக அந்த விஷப்பரீட்சையில் இறங்க மாட்டேன் !! 
 
(பல வருடங்களுக்கு முன்னர்) பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பரீட்சை எழுதும் மாணவர்கள் கட்டாயம் இங்க் (ink) பேனாவைக்கொண்டு ஊதா நிறத்தில் தான் எழுத வேண்டும் என்பது கல்வித் துறை சட்டம் இருந்தது. கையெல்லாம் கறைப்பட்டு விரல்களில் சிந்தி காகிதத்தில் படாமல், எழுதிய மாணவர்களில் நானும் ஒருவன். அதெல்லாம் முடியாது நான் கருப்பு கலர் பால்பாயின்ட்டில் தான் எழுதுவேன் என்று எந்த மாணவராகிலும் துணிந்திருந்தால் – அவருக்கு முடிவு என்னவாயிருக்கும் என்பது அவருக்கு கட்டாயம் தெரிந்திருக்கும் !!
 
ஆகவே, நான் வேதாகமச் சட்டத்திற்கு கீழ்படிகிறேன்.
 
யோவான் 3:5  இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
 
வேதவசனத்தின் மீது நிற்பதும், வேதவசனங்களால் ஆதரிக்கப்படாதவற்றிலிருந்து விலகி இருப்பதும் எப்போதும் சிறந்தது. 
 
வேதவசனமே நமது அஸ்திவாரம், அதற்கு அப்பாற்பட்ட எதுவும் பயனற்ற வாதங்களுக்கு வழிவகுக்கும். 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
  
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group) :*


--------------------*-----
Print Friendly and PDF

வெள்ளி, 27 மார்ச், 2026

#1240 – தேவதூதர்களில் ஆண் பெண் என்ற வித்தியாசம் உள்ளதா?

*#1240 – தேவதூதர்களில் ஆண் பெண் என்ற வித்தியாசம் உள்ளதா?*

*பதில் :* மனிதர்களில் இனப்பெருக்கத்திற்காகவே பாலின வேறுபாடு உள்ளது. தேவதூதர்கள் இனப்பெருக்கம் செய்வதில்லை. 

பூலோகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணவனை திருமணம் செய்த பெண், பரலோகத்தில் யாருக்கு மனைவியாய் இருப்பாள் என்று யூதர்கள் கேட்டபொழுது இயேசு கிறிஸ்து சொன்ன பதில் இதற்கான நமது விடையை காணமுடிகிறது. 

மத்தேயு 22:29-33 ”இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.  உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்; மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார் என்றார். ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்”.

இதனால், தேவதூதர்கள் மனிதர்களைப் போல பாலின அடிப்படையிலான வாழ்க்கையை கொண்டவர்கள் அல்ல என்று புரிந்துகொள்ளப்படுகிறது.

இதையே மேலும் தெளிவாக லூக்கா 20:34–36 வசனமும் உறுதிப்படுத்துகிறது: ”இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள்.  மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்”.  என்று தெரிவிக்கிறது.

தேவதூதர்கள் பொதுவாக ஆண் வடிவில் தோன்றுகின்றனர் — ஆனால் அவர்கள் உண்மையான மனித ஆண்கள் அல்ல.

வேதாகமத்தில் பெயருடன் குறிப்பிடப்படும் தேவதூதர்கள் ஆண்பால் பெயர்களைக் கொண்டுள்ளனர்:

1) மிகாவேல் - தானியேல் 10:13, யூதா 1:9, வெளிப்படுத்தல் 12:7

2) காபிரியேல் — தானியேல் 8:16, லூக்கா 1:19, 26

3) ஆதி. 18:2  தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று ”புருஷர்” அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து:

4) ஆதி. 19:1  அந்த இரண்டு ”தூதரும்” சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:

இவர்கள் உண்மையான ஆண்களல்ல, மாறாக ஆண் வடிவில் தோன்றினர்.

மேலும், கூடுதல் தகவலாக, சகரியா (5:9) புத்தகத்தில் காணப்படும் இரண்டு “ஸ்திரீகள்” தேவதூதர்கள் என்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை. 

இது ஒரு தீர்க்கதரிசன தரிசனத்தில் (vision) காணப்படும் சின்னங்களாகவே புரிந்துகொள்ளப்படுகிறது.

சகரியா 5:9 -ல் ”அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டு வருகிற ”இரண்டு ஸ்திரீகளைக்” கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள். 

இவர்கள் தேவதூதர்கள் என்று வேதம் கூறவில்லை - ஒரு தீர்க்கதரிசனத்தில் (vision) வரும் அடையாளங்கள் மாத்திரமே. 

ஆகவே, தேவதூதர்கள் எபிரேயர் 1:14-ன் படி ஆவிக்குரிய ஜீவன்களாவர்.
அவர்களுக்கு மனிதர்களைப் போல உடலியல் பாலினம் இல்லை.
அவர்கள் ஆண் வடிவில் தோன்றுவது, மனிதர்கள் புரிந்துகொள்ளும்படி கொடுக்கப்பட்ட வெளிப்பாடு மட்டுமே; அது அவர்களின் இயல்பை குறிக்கவில்லை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

*கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய:

வலைதளம் :

YouTube “வேதம் அறிவோம்” :

-------------------------*
Print Friendly and PDF

திங்கள், 2 மார்ச், 2026

#1239 - இந்த வசனத்தில் உள்ள சகரியா யார்?

 #1239 - *இந்த வசனத்தில் உள்ள சகரியா யார்?* ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. லூக்கா 11:50

*பதில்* :  வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலாவது நீதிமானின் பலி - ஆதாமின் இரண்டாவது மகனான ஆபேல் (ஆதி. 4)
 
யூத வேதாகம வரிசையின்படி (எபிரேய வேதாகமம்) கடைசி புத்தகமான 2 நாளாகமத்தில் – கொலை செய்யப்பட்ட யோய்தாவின் மகன் சகரியா, கடைசி நபர். 
 
இந்த சகரியாவின் சம்பவம்: 2 நாளாகமம் 24:20–22ம் வசனங்களில் காணலாம்.
இவர் பிரதான ஆசாரியனான யோய்தாவின் மகன். யூதா ராஜாவான யோவாசை கண்டித்தார்.
இதனால், ஆலயப் பிரகாரத்தில் (2நாளாகமம் 24:21) வைத்து இவர் கொல்லப்படும் பொழுது “கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்”. 
 
“பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே” என இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகளோடு மிகவும் பொருந்துகிறது:
 
மத்தேயு 23:35ல் இந்த வாக்கியத்தை பதிவு செய்த மத்தேயு, “பரகியாவின் குமாரன்” என்று கூடுதல் தகவலைத் தெரிவிக்கிறார். 
 
சகரியா 1:1ன்படி, சகரியா தீர்க்கதரிசியானவர் இத்தோவின் மகனான “பெரகியாவின் குமாரன்” என்று காண்கிறோம்.
 
சிறிய தீர்க்கதரிசிகளின் புத்தகங்களில் ஒன்றாக கருதப்படும் சகரியா புத்தகத்தை எழுதியவர் தான் மத்தேயு குறிப்பிடுவதாக சிலர் நினைக்கிறார்கள்.
 
ஆனால், இந்த சகரியா கொல்லப்பட்டார் என்றோ, தேவாலயத்தில் / பலிபீடத்தில் கொல்லப்பட்டதாகவோ வேதாகமத்தில் ஆதாரம் இல்லை.
 
இந்த சகரியா பாபிலோன் சிறைவாசத்திற்குப் பிறகு தீர்க்கதரிசனம் உறைத்தவர்.
 
*அப்படியெனில், மத்தேயு குறிப்பிடும் பரகியாவின் குமாரன் என்பவர் 2 நாளாகமம் 24:20–22-ல் குறிப்பிடப்படும் யோய்தாவின் குமாரன் சகரியா அவர் தான் என்று எப்படி கருத முடியும்?*
 
வேத அறிஞர்கள் இது எழுத்துப்பிழையினால் அல்லது எபிரேயர்களுக்கு வழக்கமாக இரண்டு மூன்று பெயர்கள் இருப்பதனால், பரகியாவும் கூடுதல் பெயராக இருந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது. 
 
யூதர்களிடையே ஒரே நபருக்கு இரண்டு பெயர்கள் இருப்பது வழக்கம்; உதாரணமாக, மத்தேயு லேவி என்றும், லெபேயு, ததேயு, சீமோன், கேபா, பேதுரு என்பது அறிகிறோம். 
 
*ஏன் “ஆபேலிலிருந்து சகரியா வரை”?*
ஆபேல் (ஆதியாகமம் 4) – முதல் நீதிமானின் இரத்தம் சிந்தப்பட்டது.
யூத வேதாகம வரிசையில் (எபிரேய வேதாகமம்) கடைசி புத்தகம் 2 நாளாகமம்.
அதில் பதிவிடப்பட்ட கடைசி கொல்லப்பட்ட தீர்க்கதரிசி – யோய்தாவின் மகன் சகரியா. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:* https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*எங்களது வலைதளம்* : http://www.kaniyakulamcoc.wordpress.com

*எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்”* : https://www.youtube.com/joelsilsbee

-------------------------*
Print Friendly and PDF